இக் குழந்தைகளின் பிறப்பிடம்

புதன், 27 அக்டோபர், 2010

வார்த்தைகள் வழியும் கால்வாய்...!

இருமனங்களுக்கு இடையில்

ஓருமனதாய்

வெட்டப்பட்டதொரு

கால்வாய்



தூரப்பார்வையில் ஒரேமாதிரித்

தென்பட்ட இரு கரைகளின்

ஏற்றத் தாழ்வுகள் கிட்டப்பார்வையில்

கண்டறியப் பட்டன



வலகரை உயர்ந்த சில இடங்களும்

இடகரை உயர்ந்த சில இடங்களும்

பொதுவில் ஒரு ஒற்றுமையை

புதிதாய் உருவாக்கிக் கொடுத்தது



புதிதாய் வெட்டப் பட்டதால்

தடங்கித் தயங்கி ஊரத்துவங்கிய

வார்த்தைகள்

சிறு சிறு தடைகள்

அடித்துச் செல்லப் பட்டதும்

தடங்கலின்றிப் பாயத்துவங்கி

இருகரை தொட்டுயரத் துவங்கின



அபாய நிலை வரும் முன்னரே

அணை போட்டுத் தடுத்தது அரசு

அடுத்த அறிவிபு்பு வரும் வரை

தற்காலிகமாகத் தள்ளிப் போடப்பட்டது

அணைத் திறப்பு



அணைகரையை முட்டிய வார்த்தைகள்

அலைபேசி வழியாய்

கசியத் துவங்கின





பெரிய கால்வாயின்

நடுப்பகுதியில்

ஒரு சிறு ஓடையாகத்

தன்னைச் சுருக்கிக் கொண்டபடி

வளைந்தும் நெளிந்தும்

வழிந்து கொண்டிருந்தன

வார்த்தைகள்.


அரசுக்குத் தெரியாமல் அவ்வப்போது

கள்ளத்தனமாய்த் திறக்கப்பட்ட

அணையிலிருந்து

அவசரமாய் வெளியேறத் துடித்த

வார்ததைகளின் வேகம்

கரைகளை அசைத்துப் பார்த்தது


வேக வார்த்தைகள்

வழிந்து தீர்ந்த

அந்த அழகிய நடுநிசியில்



இரு கரைகளுக்குமி்டையே

மெளன ஊற்று

பீறிட்டுக் கிளம்பியது



சத்தமே இல்லாத வார்த்தைகள்

இரு கரைகளினிடையே

வந்து போய்க் கொண்டிருந்தன

யாரும் அறியாமலே....!

புதன், 6 அக்டோபர், 2010

தொடரும் மழை...!

காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…!

ஞாயிறு, 2 மே, 2010

குறட்டையில் கலையும் கவிதைகள்….!

தாழிடப்படாமல் சாத்தப்பட்டிருந்த
கதவுக்குப் பின்னால்
அடைக்கப் பட்டிருந்த குளிருக்கு
நடுவே சன்னமாய் உறுமிக் கொண்டிருந்த
கணிணியில் முடக்கப்பட்டிருந்தன
என் கனவுகள்…

கவிழ்ந்திருந்த தலை கவிழ்ந்த படியேப்
பார்த்துக் கொண்டிருந்த அந்த மிகச்சிறு
கணப்பொழுதில் காலம்
அன்றைய இரவின் மணி ஒன்பதைக் கடந்தது

கணிணி மடிக்கப்பட்டது

கம்பிகள் சுருட்டப் பட்டன

பை சுமக்கப் பட்டது

சாவிகள் எடுக்கப் பட்டன

கதவு பூட்டப் பட்டது

கால்கள் தளர் தாளம் போடத் துவங்கின

பால் மழை வழிந்த
கறுப்பு வீதியில்
பாதம் பதிக்கையில்

முடித்தவைகளும்
முடியாதவைகளும்
முடிக்காதவைகளுமாகிய குப்பைகள் அத்தனையும்
துடைத்தெறியப் பட்டன

இருந்த பாரம் குறைந்ததும்
கொண்டு வந்து கொட்டப் பட்டன இன்னுமொரு
வண்டிக் குப்பைகள்…

மேலிருந்த குப்பையை விலக்கித் தேடிய கைகளுக்குச்
சட்டென்று கிடைத்தது…
“ஆமைக் கூட்டிற்குள் அடைக்கப்பட்ட தலையாய்
அவ்வப்போது எட்டிப் பார்த்த…”

‘ கண்காட்சி ஆமை எப்போதுமே தலையை வெளியே வைத்து சுற்றிக் கொண்டிருந்ததே…’
தட்டிப் பார்க்கையில் பொருள் உள்ளே உடைந்து போயிருக்க
ஓரம் வைத்துவிட்டு
கைவிட்டுத் துழாவிய போது
கிடைத்தது இன்னொன்று…

“நத்தைக் கூட்டின் ஓடுகளுக்குள்….
சிறைப்பட்ட …………..”
இழுக்கும் போதே கிழிந்து போனது
இற்றுப் போயிருந்த வார்த்தைகள்

“முழுமானை விழுங்கிய
மலைப்பாம்பின் பசியாக
எப்போதாவது வந்து
எட்டிப்பார்த்துப் போகும்
அவனுள்ளிருக்கும் கலை….”

உரசிப் பார்த்து தங்கமில்லை என்றாலும்
புதுச்சரக்கு என்றுப் பத்திரப் படுத்தியது மனது.

இதற்குள்ளேப் பாதங்கள் படியேறி
நின்றுவிட

சாவி நுழைக்கப்பட்டது

கதவு திறக்கப் பட்டது

விளக்கு எரிந்தது

வெள்ளுடை பறந்தது

அடுப்பின் ஓசையில்
அசுரன் விழித்தெழ
மட்கிய குப்பைகளுடன்
மண்மூடிப் போயின
புதிய சருகுகளும்

பசியாறி வந்து
படுத்துக் கிடக்கையில்
கிளறிய குப்பையின்
பொறுக்கிய வார்த்தைகள்
ஊரத் துவங்க

உதறிப் போர்த்திய போர்வைக்குள்
புரண்டு படுக்கையில்
கேட்கும் குறட்டையொலின்
அதிர்வில்

கலைந்து பறப்பவை காற்று மட்டுமல்ல
இறந்து போன என்
கவிதைக் கருக்களும் …!

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

நானும் - நகையும்

மலைகளில் பிறந்தேன்
மரங்களூடு வளர்ந்தேன்...

மாறும் சூழலுக்கேற்ப
விரிந்தும் ஒடுங்கியும்
நடந்தும் விரைந்தும் திரிகிறேன்...

கரையில் இருந்துகொண்டு
அடைபட்டுக் கிடப்பதாயும்
ஆமைபோல் நடப்பதாயும்
இகழ்வோரே...

"நான் அடைபட்டுக் கிடப்பதால் தான்
உன்னால் கரையில் வாழமுடிகிறது"
சொல்லாமலே செல்கிறேன்
நகைத்தபடியே ....

திங்கள், 12 ஏப்ரல், 2010

நினைவலைகள் – ஊஞ்சல்.

குஞ்சாலம் என்று எங்கள் வட்டார வழக்கில் வழங்கப்படும் ஊஞ்சல் என் நினைவில் இன்று ஆடியது ஒரு தற்செயலாக இருக்கலாம். ஆனால் ஊஞ்சலின் நினைவுகள் என் உள்ளத்தில் மிக ஆழமாகப் பதிந்துள்ளன.

ஊஞ்சல் என்றதும் பலருக்கும் பூங்காக்களில் நான்கு கம்பிகள் நடப்பட்டு அவற்றின் குறுக்கேக் கட்டப்பட்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும் துருப்பிடித்த இரும்புப் பலகைகள் தான் நினைவுக்கு வரும்.

துருவேறாத பலகைகளில் சிறுவர்கள் சென்று அமர்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் நின்று பார்த்து விட்டுச் செல்வதோடு சரி. மனதில் ஆசையிருந்தாலும் போய் அமர்ந்து ஆடும் அளவிற்குத் தைரியம் இருப்பதில்லை. பார்த்த மகிழ்ச்சியிலேயேச் சென்று விடுவது வழக்கம்.

பெரியவர்களானதும் நாம் இழந்து கொண்டிருப்பவைகளில் முக்கியமான ஒன்றாக நான் சொல்வது, வளர்ந்ததுமே குழந்தைகளாக நாம் இருக்கும் போது கொண்டிருந்த பல பழக்கங்களையும் விட்டுவிடவேண்டியிருப்பது. நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ சமுதாயத்தின் பார்வைக்காக நமது குழந்தை மனதையும் இரசனையையும் விட்டுத் தொலைக்க வேண்டியுள்ளது.

வயல்வெளியில் நடந்து கொண்டிருப்போம் வரப்பில் அமர்ந்தபடி வாய்க்காலுக்குள் கால்களை நுழைத்து காலைப் பனியைச் சுமந்தபடி வந்து கொண்டிருக்கும் குளிர்நீருக்குள் அளைந்து கொண்டிருக்க விருப்பமிருக்கும் ஆனால் யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயமிருக்கும்.

குளக்கரையில் இறங்கி கணுக்கால் வரை புதையும் சகதிக்குள் இறங்கி பூத்துக்கிடக்கும் தாமரையைப் பறித்து விட்டு அந்தச் சகதியை மேலும் மேலும் மிதித்து மிக மிக நுண்ணிய சகதி விரல் இடுக்குகள் வழியாக நுழைந்து வெளியேறுவதை இரசிக்கும் ஆசை மிகும்.
ஆனால் முடிவதில்லை...

இப்படி எத்தனையோ அழகுகளை வளர்ந்ததும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் அப்படிப்பட்ட இன்னொரு நிகழ்வுதான் ஊஞ்சல்.

நாம் ஆடுவதைத் தவிர்த்து நமது குழந்தைகளை மட்டும் ஆடவிட்டு அதுவும் தவணை முறையில் ஆண்டுக் கொருமுறையோ அல்லது ஆண்டுகளுக் கொருமுறையோ வாய்ப்பளிக்கும் இந்த ஊஞ்சலானது நமது
கிராமங்களில் ஒரு ஊஞ்சல் திருவிழாவாகவே கொண்டாடப் பட்டிருந்தது என்றால் நம்ப முடியுமா?

அதுவுமல்லாமல் வீடுகளின் திண்ணையில் அல்லது முன்னறையில் ஊஞ்சல் போடுவதற்கென்றே தனியாக உத்திரங்களும் தூண்களும் நிறுத்தியிருந்த அமைப்புகளை நாம் இன்றும் பல திரைப்படங்களில் காணலாம்.

நாட்டாமை திரைப்படத்தில் நாட்டாமை அமர்ந்திருக்கும் ஊஞ்சலும் ஒரு கதாப்பாத்திரமே.

அட மனிதர்களை விடுங்கள் கடவுள்களையே நாம் ஊஞ்சலில் ஆடவைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நான்கு முனைகளிலும் வளையம் கோர்க்கப்பட்டு அவற்றில் கட்டப்பட்ட சங்கிலிகளில் தொங்கும் பலகை பெரும்பாலும் வீடுகளில் நிரந்தரமாகத் தொங்கவிடப்படும் ஊஞ்சல்கள். இது போக ஆண்டில் சில மாதங்கள் பயன்படுத்தப் படும் உடனடி ஊஞ்சல்கள் தான் இங்கே நான் சொல்லப் போவது.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் (மாதங்கள் சரிதானா? எனக்கு சந்தேகமாயிருக்கிறது தெரிந்தவர்கள் இருந்தால் உறுதிப்படுத்துங்களேன்) ஊரில் யார் வீட்டில் முதலில் ஊஞ்சல் கட்டப் போகிறார்கள் என்பதே சிறுவர்கள் எங்கள் பந்தயமாக இருக்கும். இதற்காக வீட்டில் பெரியவர்களை நச்சரிக்காத நாள் இல்லை.

ஊஞ்சலுக்கு முக்கியத்தேவைகள்

நல்ல மரம் குறைந்த பட்சம் மூன்றிலிருந்து ஐந்தடி தூரம் தண்டிலிருந்து தள்ளியிருக்கும் வலுவான கிளை அவசியம்.

ஓரு நல்ல கயிறு. வடம் என்றால் உறுதியாக இருக்கும்

நூல் சாக்கு (கோணி) கயிற்றை கிளையில் கட்டும் போது உராய்ந்து கயிறு அறுபடுவதைத் தவிர்க்க கயிற்றுக்கும் கிளைக்கும் இடையில் உராய்வு நீக்கியாகப் பயன்படும்.

குறுக்குக் கம்பு. பலகைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுவது. கிராமங்களில் பெரும்பாலும் உலக்கை.

எங்கள் வீடு கட்டுவதற்கு முன்னால் எஙகள் நிலத்தில் நடுநாயகமாக நின்று கொண்டிருந்த பெரிய வேப்பமரம் தான் எங்கள் ஊஞ்சல் களம். தாத்தா விடம் பெரிய வடம் இருக்கும். வருடம் முழுவதும் காணாமல் போகும் வடம் மிகச் சரியாக ஊஞ்சல் காலத்தில் வெளிவந்து விடும். 75 வயதிலும் மரத்தின் மீது ஏறி ஊஞ்சல் போட்டுக் கொடுப்பார்.

ஊஞ்சல் போட்டாச்சு என்றாலே கொண்டாட்டம் தான். பள்ளி இறுதி மணி ஒலித்து முடிக்கையில் புத்தகப் பையை வீட்டில் எறிந்து விட்டு ஒரே ஓட்டமாக ஓடுவது வேப்பமரத்தடிக்குத் தான்.

அண்ணன்களுக்கு முன்னால் ஓடிச் சென்று ஒரு முறையாவது ஆடிவிடவேண்டும். அவன்கள் வந்து விட்டால் அப்புறம் ஆடுவது முடியாது என்பதால் இந்த மராத்தான் தினசரி நடக்கும்.

விளையின் வாயிலில் நுழையும் போதே மரத்து மூட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் ஓட்டத்தைச் சற்று நிதானப்படுத்தி ஓடிச்சென்று முடிச்சை அவிழ்த்து நமது உயரத்திற்கு உலக்கையை சரிப்படுத்தி மறுபடி முடிச்சிட்டு ஏறி அமரப் போகும் வேளையில்
விளிச் சென்று காலில் புளிய மிலாறு அடி விழும்.

திரும்பிப் பார்த்தால் அம்மா புளியமிலாறோடு நின்று கொண்டிருப்பார்கள். அப்புறம் பள்ளிகொடத்துக்குப் போய்ட்டு வந்து புக்க வெளிய வாசல்லருந்தே தூக்கி உள்ளப் போட்டுட்டு, துணி ஏதும் மாத்தாம சீருடையோடவே வெளையாட வந்தா…

"யய்யா… யம்மா…" னு கத்திகிட்டே ஓடிப்போய் புத்தகத்த எடுத்து ஒழுங்கா வச்சிட்டு துணிய மாத்திட்டு திரும்பி வந்து பார்த்தா... ஒரு கும்பலே அங்க சண்ட போட்டுட்டுருக்கும்.

அவ்வளவுதான் இன்னிக்கி குஞ்சாலம் ஆடுனாப்பிலதாண்ணு ஒரு ஓரத்தில போய் உக்காந்துக்க வேண்டியது.

இந்தக் கோஷ்டில முத்தவன் செய்ற அலப்பற இருக்கே… எல்லாரையும் முறை போட்டு இவனுக்கடுத்தது தான் யாருண்ணாலும் ஆடனும். இவன் மட்டும் தனியா ஆடுவான் மத்த எல்லாரும் மூணு மூணு பேரா ஆடணும்…
எந்த ஊரு ஞாயம் இதுனு மனசு கேக்கும் வெளிய சொல்ல முடியாது. சொன்னா அப்புறம் மூணு பேரு கூட ஆடுற வாய்ப்பு கூட கெடைக்காது.

வீட்டுல வந்து சொன்னா "உன்ன யாரு அங்க போவச் சொன்னது? நாளக்கி படிப்பு உண்டுல்ல போய் படின்னு பதில் வரும்".

படிக்கிறதா?

இந்தக் கொள்ளக்கி அங்கப் போயி மூணு பேரு என்ன அஞ்சிபேரு சேந்து கூட ஆடலாமே. ஆடக்கூட வேணாம் சும்மாப் பாத்துட்டாவது இருக்கலாமே.

ஊஞ்சல் ஆடுறது ஒருத்தர் மட்டும் ஆடலாம் ரெண்டு பேரு சேர்ந்து ஆடலாம் மூணுபேரு சேந்து ஆடலாம்.

ஒருத்தர் ஆடும் போது நடுவில உக்காந்துக்கணும். ஊஞ்சல்ல உக்காந்துட்டு ஓரு பக்கமா போய் நின்று காலை எடுக்கும் போது ஊஞ்சல் எதிர்ப்பக்கம் போய் உயர்ந்து பின் கீழிறங்கி நாம் நின்ற பக்கம் உயரேப் போகும்போது மிகச்சரியாக நமது கால் உயரம் தாண்டும் போது பாத நுனியால் லேசாக ஊன்றி எத்தினால் இன்னும் வேகமெடுத்து ஆட ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு முறை இந்தப் பக்கம் வரும் போதும் காலை ஊன்றி ஊன்றி சாவகாசமாக ஆடிக் கொண்டிருக்கலாம்.
இந்த மூத்தவன் இருக்கானே அவன் ஆடி முடிச்சாச்சிண்ணா உலக்கைய அவன் உயரத்துக்கு மாத்திட்டு அப்படியே போட்டுட்டு போயிடுவான். பெரிய பெரிய முடிச்சு போட்டுஅதை அவுக்கவும் தெரியாது என்ன செய்றது அதுக்கும் வழி வச்சிருப்போம்ல நாம.

உலக்கைல ஒரு கையும் கயிற்றுல ஒருகையும் புடிச்சிட்டு வெறும் ஊஞ்சல தள்ளிகிட்டே ஒரு பக்கமா உயரத்துக்கு கொண்டு போறது. அப்படியே பின்பக்கமா ஓடிய படியே இந்தப்பக்கம் கொண்டு வரது இப்படியே மாத்தி மாத்தி ஓடி ஓரளவுக்கு வேகம் வந்ததும். ஒரு பக்கம் உயரத்திலருந்து வரும்போது தாவி ஏறி உக்காந்திடுறது.

இப்படி ஏறி உக்காந்திட்டு காலால ஊன்றி ஆட முடியாது தரை எட்டாது. இந்த மாதிரி நேரத்தில வடத்தைப் பிடிச்சிகிட்டே உலக்கைல ஏறி நின்றபடி ஊஞ்சல் நடுவில் வரும்போது குனிந்து ஒவ்வொரு பக்கம் உயரத்தில் போகும் போது கால்களால் உலக்கையை இன்னும் உயரத்தில் தள்ளவேண்டும் இப்படித் தள்ளும் போது மெல்ல மெல்ல ஊஞ்சல் அசுரவேகமெடுக்கும் அதே நேரத்தில் நல்ல உயரத்திற்குச் செல்லும் அப்படியே அந்தரத்தில் பறப்பது போல் இருக்கும். கைகள் பிடி வலுவாகவும் கவனமாகவும் இல்லை என்றால் தவறி விழும் அபாயம் அதிகம். அதே போன்று சரியான முறையில் செலுத்தவில்லை என்றால் ஊஞ்சல் திசை மாறி மரத்திலோ அல்லது கிளைகளிலோ முட்டிக் கொள்ளும் அபாயம் உண்டு. இந்த முறைக்குப் பேரு தெண்டல் வெட்டு. (பேருக்கு விளக்கம் எல்லாம் கேக்க கூடாது)

இரண்டு பேர் ஆடும் போது இருவரும் ஒரே பக்கம் பார்த்தபடி அமர்ந்து சேர்ந்தார் போல் கால்களை உதைத்து ஆடவேண்டும். மாற்றி மாற்றி அமர்ந்தாலோ அல்லது உதைத்தாலோ ஊஞ்சல் சுற்றவாரம்பித்து விடும்.

மூன்று பேர் ஆடும் போது இன்னும் சுவாரசியமாக இருக்கும். இருவர் ஒரே பக்கமாகப் பார்த்தபடி இரண்டு ஓரங்களிலும் அமர்ந்திருக்க ஒருவர் மறுபக்கம் பார்த்தபடி நடுவில் அமர்ந்து கொள்ள வேண்டும் இதனால் ஊஞ்சல் இருமுனைகளுக்குச் செல்லும் போதும் உந்தித் தள்ள முடியும். ஒவ்வொரு வரும் அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் ஊஞ்சல் வரும்போது உந்தித் தள்ள வேண்டும்.
இதில் நடுவிலிருப்பவர் முதலில் ஊஞ்சலை தள்ளிவிட்டு அந்த வேகத்திலேயே ஏறிக் கொள்ளலாம்.

ஊஞ்சலை யாராவது தள்ளச் சொல்லிவிட்டு கண்களை மூடியபடி முகத்திலறையும் காற்றை இரசித்தபடியே ஆடும் போது கிடைக்கும் பறப்பது போன்ற உணர்வு இருக்கிறதே…
அனுபவித்தால் தான் புரியும்.

ஊஞ்சலாட்டம் ஒரு பொழுது போக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல் அது ஒரு கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறது.

ஊஞ்சலாடும் போது பாடுவதற்கென்றே தனிப் பாடல்கள் இருந்திருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று.

ஏல ஏலோ ஏலேலோ.... ஏல ஏலோ ஏலலோ......
ஏல ஏலோ ஏலேலோ....... ஏல ஏல ஏலலோ........
நடுசாம ஏலேலோ........ வேளையிலே ஏலேலோ..
நடந்து போனார் ஏலேலோ.... அயல் தேசம் ஏலேலோ…


இந்த இராகத்தில் களியல் பாடல்கள் உள்ளன. ஆனால் இது போன்ற பல பாடல்களைப் பாட்டிகள் பாடுவார்கள். சிறுவயதில் கேட்டவை மறந்து விட்டது. இந்த ஒரு பாடல் மட்டும் களியலோடு சேர்ந்த பாடல் என்பதால் நினைவில் இருக்கிறது.

களியலாட்டத்தின் இந்தப் பாடலின் ஆட்டமுறையும் ஊஞ்சலாடுவது போன்றே அமைக்கப் பட்டிருக்கும்.

ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் குடும்பமே மர நிழலில் அமர்ந்தபடி ஊஞ்சலாடுவது ஊஞ்சலாட்டத்தை கண்டுகளித்தபடி பல விதவிளையாட்டுக்களும் நடைபெறும்.

அது ஒரு குடும்ப பகிர்வாகவே இருக்கும். ஊஞ்சலில் நிகழும் காதல் குறும்புகளும். தள்ளி விடு மாமா என்றும் மச்சான் என்றும் களித்துக்கிடக்க மக்களின் வாழ்வில் ஒரு கொண்டாட்டமாகவே திகழ்ந்தது இந்த ஊஞ்சல். பல நேரங்களில் சாப்பாட்டுப் பானைகளும் ஊஞ்சல் களத்திற்கு வந்து விடும்.

பெரியவர்களை ஆடச் சொல்லி கயிறு அறுந்து விழுந்து பலகை உடைந்து விழுந்து அதை வைத்து கேலி செய்து சிரிக்க சிரிக்கப் பேசி.. கேலியும் கிண்டலுமாய் எத்தனை கவலைகள் இருந்தாலும் மறக்கச் செய்யும் அருமருந்து ஊஞ்சல்.

வாழ்க்கையின் கொண்டாட்டமான விளையாட்டுகளில் ஒன்று ஊஞ்சல் என்பது மிகையல்ல.

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

கனவிலா...? நனவிலா....?

ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...
மாறும் காற்றுகளால்
மேலே... கீழே ...கீழே ....மேலே ...
சுழன்று....
நிலை குலைந்து தொலைந்தேன்....
இன்னும் மிதந்து கொண்டுதானிருக்கிறேன்......
மேலா.... கீழா...?
கனவிலா ... நனவிலா..?
இருக்குமிடம் தெரியாமலேயே...

புதன், 31 மார்ச், 2010

நினைவலைகள் : விலாங்குமீன் வேட்டையும் தவமிருந்த பாம்புகளும்....

நாளுபூரா வெயிலடிச்சாலும் தாங்கிக்கிடலாம் ஆனா ஒரு நாள் மழை பெஞ்சா மனுசனால தாங்க முடியுதா?
வெயிலடிக்கும் போது மழை பெய்யாதா மழை பெய்யாதாணு வானத்த பாக்குற எல்லாரும் மழை பெய்ய ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோசப்படுவாங்க… ஆனா அதே மழை ஒரு நாள் முழுக்க பெஞ்சா அவ்வளவு தான் அடடடே என்ன மழை எப்ப பாரு சொத சொதனு… திட்ட ஆரம்பிச்சுடும் சனங்க.
அதுலயும் இந்த ஆனி மாசம் வந்துட்டாலே தென்மேற்கு பருவமழை ஆரம்பிச்சுடும். வைகாசி மாச கடைசிலேயே மழை வந்துடும். ஆனா இந்த ஆனி மாசத்து மழை பெஞ்சோம் நின்னோம்னு நிக்கிறதுல்ல எப்ப பாரு அருவி பக்கத்தில தெறிக்கிற சாரல் மாதிரி துளி துளியா விழுந்துட்டே இருக்கும்.

இந்தளவுக்கு இரைச்சல் இல்லாத அந்த காலத்துல மழை வர்றத தூரத்தில இருக்குற கடலோட சத்தத்த வச்சே கண்டு புடிச்சுடுவாங்க… ஒரு பழமொழி வேற இருக்கு முட்டத்து கடலடிச்சா முத்தம் தெவராம மழை பெய்யும்னு…

அடுத்தது ஐப்பசி மாச மழை அது அடிச்சா ஒரே அடிதான். அந்த மழைல மலைமேல பெய்யிற மழையால பேச்சிப்பாற அணை ஒரே வாரத்துல நெறஞ்சிரும். அதுக்கு மேலயும் மழைபெஞ்சின்னா மறுகால் தொறந்து விட்டுருவானுவ.. அந்த மறுகால் தண்ணி மழத்தண்ணி எல்லாம் சேந்து வள்ளியாத்துலயும் கோதையாத்துலயும் வெள்ளமா ஓடும். எங்க எங்க ஆத்தங்கரை எல்லாம் அபகரிச்சி கட்டடம் கட்டி வச்சிருக்கானுவளோ எல்லாத்தயும் எங்க எல்லைக்குள்ள எவண்டா கட்டடம் கட்டுனதுணு ஒட்டு மொத்தமா அடிச்சிட்டு போயிடும்… அப்பதான் நில அளவுக்காரங்களுக்கே தெரியும் இங்க வர ஆறு இருக்காண்ணு

அடபாருங்க என்ன சொல்ல வந்து என்னத்த சொல்லிட்டுருக்கண்ணு… கன்னியாகுமரி மாவட்டம் மலையும் கடலும் இடைப்பட்ட நிலப்பரப்பு கொஞ்சமா இருக்குறதால மலைல பெய்யிற மழைத்தண்ணி எல்லாம் நேரா கடலுக்கு போயிடும். அதனால அங்கங்கே நிறைய குளங்கள் இருக்கும். பெருசா ஏரினு சொல்லுற அளவுக்கு இல்லணாலும் சின்னதும் பெருசுமா நிறைய குளங்கள் இருக்கும்.

ஆத்துலருந்து வாய்க்கால்கள் வழியா தண்ணி ஒருகுளத்துக்கு போகும் அதுநிறைஞ்சதும் அங்கருந்து அடுத்த குளம் அங்கருந்து இன்னொண்ணு இப்படியே எல்லா குளங்களும் ஒண்ணுக்கொண்ணு தொடர்பு இருக்கும். ஒவ்வொரு குளத்துக்கும் ஒரு பாசனப் பரப்பு இருக்கும். இத ஏலாணு சொல்லுவாங்க … இந்த குளங்கள் ஒவ்வெண்ணோட பேர வச்சி ஒவ்வொரு கதை சொல்லலாம் செட்டி குளம், செறுவெட்டி குளம், குண்டு வெட்டி , பெருங்கோடு, காட்டு குளம் இப்படினு…

இந்த மழை வந்துச்சுண்ணா மனுசங்க எந்த அளவுக்கு சந்தோசப்படுவாங்களோ தெரியாது ஆனா இந்த குளத்துல கெட்டுபட்டு கெடக்குற தண்ணில கெடக்க மீனுவளுக்கு இருக்குற சந்தோசம் எழுத்துல எழுதிர முடியாது…

சந்தேகம்னா நல்லா மழை பெய்யிற நேரத்தில கொளத்தங்கரைல போய் நின்னு பாருங்க.. அப்படியே பெய்யிற மழைக்குள்ள பூந்து வானத்துக்கு போற மாதிரி துள்ளும் இந்த கெண்ட மீனுவ எல்லாம்.

ஆனா இந்த விலாங்கு மீனு இருக்குதில்ல இதுக பண்ற வேலையே வேற… மழை பெஞ்சதும் வாய்க்கா வழியா புதுத்தண்ணி குளத்துல வந்து சேர்றது தான் தாமசம் அந்த வாசனைய புடிச்சிட்டு குளத்துல அடியாழத்துல இருக்குற இவுக ஒட்டு மொத்தமா வாய்க்காலுக்கு வந்துடுவாக…

விலாங்கு மீனப்பத்தி கேட்டுருப்பீக… இரட்ட வேசம் போடுறவியள வெளவாலுண்ணு சொல்லுற மாதிரி விலாங்குண்ணும் சொல்லுவாவ… பாம்பு போலவே இருக்கும். வால வச்சிதான் கண்டு புடிக்கணும். அதான் சொல்லுவாவ பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டுற விலாங்கு மீனுணு…

இப்படி வாசம்புடிச்சுட்டு வாய்க்காலுக்கு வந்த மீனுவ அப்படி அங்கே நிக்கிறதில்ல அப்படியே வாய்க்கா வழியா மேல போக ஆரம்பிக்கும்ங்க… விலாங்கு மீன் வெறும் புழு மட்டும் தின்னுறதில்ல சின்ன சின்ன தவளைய கூட தின்னுடும். அதப்புடிக்கணும்னா சின்ன தவளைக் குட்டிகளத்தான் தூண்டில்ல மாட்டி போடணும். விலாங்கு மாட்டுதோ என்னவோ நாங்க விலாங்குக்கு தூண்டில் போட்டோம்னா ஒரு பாம்பாவது அடிக்காம விட்டதில்ல…

சரி கதக்கி வருவோம்… இப்புடி வாய்க்கா வழியா மேலே மேலே போய்கிட்டுருக்கிற விலாங்கு மீன் குளத்தையே மறந்துடும். மழைபெய்யிறது நின்னோடன வாய்க்கால்ல தண்ணி வரது கொறஞ்சிரும்… அங்கங்க குண்டு குண்டா இருக்கிற இடத்துல கெட்டுபட்டு கெடக்குற தண்ணில பக்கத்தில இருக்குற பொந்துகள்ல போய் பூந்துக்கும்.

இப்புடி மழை தீந்த அடுத்த நாள் வெள்ளம் வடிஞ்சோடன தான் நம்ம வேட்ட ஆரம்பிக்கும். விலாங்கு புடிக்க கெளம்பிருவோம்… ஆனா நமக்கெல்லாம் மீன் புடிக்க போனா மீன் கெடக்கிதோ இல்லியோ.. அண்ணிக்கி வீட்டுல நல்ல புளிய மிளாறு பூசை நிச்சயம். அதனால வீட்டுக்கு தெரியாம ஒளிச்சி ஓடிடுறது.

அந்த வருசம் இப்புடி தான் ஒரு வாரமா பயங்கற மழை. பள்ளிகூடம் எல்லாம் அடச்சிட்டாங்க… ஒரு வாரமா பெய்த மழை ரெண்டு நாளாதான் வெறிச்சிருக்கு.. விடுவாங்களா நம்மாளுங்க காலங்காத்தால கஞ்சிய குடிச்சமோ பல்லு தேச்சமோ இல்லியோ… திட்டம் போட்டுட்டு கெளம்பியாச்சு.. எங்க ஊருப்பக்கமா ஓடுற சானல்லருந்து பிரியிற வாய்க்கா வழியா இறங்கியாச்சு… வரப்பு வழியாவே போய்கிட்டுருக்கோம்…

ஆனா மழை பெஞ்ச அடுத்த நாளு வயக்காட்டுக்கு போற சுகம் இருக்குல்ல அடாடா… அதுலயும் தென்னந்தோப்பும் தோட்டங்க வயலு எல்லாம் பச்ச பச்சையா கண்ணுக்கு குளு குளுணு இருக்கும். தண்ணி தண்ணி தண்ணி தான் வாய்க்கா வயலு தோப்பு எல்லா பக்கமும்… மரத்தில இலையில ஒட்டிட்டுருக்குற தண்ணி காத்துல ஆடியோ இல்லண்ணா கூட்டுக்காரன் செய்யிற விசமத்துல ஆடியொ உடம்புல உளும்போது அந்த குளுருல உடம்பு சிலுத்துக்கும் பாருங்க… அதெல்லாம் அனுபவிச்சாதாங்க புரியும்.

என்னா விசமம் பண்ணுவானுகணு கேக்குறியளா? வசமா வந்து தோள்ல கையபோட்டுட்டு லேய் மைனா கூடு கட்டி குஞ்சு பொரிச்சிருக்கு பாக்குரியால ணு கூட்டிட்டு போவானுவ போய் தோதா ஒரு மரத்துக்க கீழ நிக்க வெச்சிட்டு தூரத்தில தெரியிற மரக்கிளைய காட்டி அதுல பாருலம்பானுவ நமக்கு ஒண்ணம் தெரியாது. இருந்தா தான தெரியிறதுக்கு… உத்து உத்து பரத்துட்டுருப்போம் இதுதான் சாக்குண்ணு … தள்ளிப்போய் நின்னுட்டு கொப்பு நுனிய புடிச்சி உலுப்பி உட்டுருவானுவ… அடிச்சி பொரண்டு ஓடுவோம்…

இதே கூத்து அடுத்த நாளு அவனுக்கு வேற உருவத்துல இருக்குமுல்ல. பள்ளிகொடத்துல தின்னுட்டு தின்ன முடியாத சோத்த ஒரு இடத்துல தட்டி வச்சிருறது மறு நாளக்கி அந்த இடம் பூரா ஒரே எறும்பா இருக்கும். அதே மைனா என்ன இந்த தடவ கிளியா இருக்கும். கூட்டிட்டு போய் எறும்பு கூட்டத்துல நிக்க வச்சிட்டு ஓடிடுறது… நம்மளால முடியலனாலும் எறும்ப வச்சி சாதிச்சுடுவோம்ல…

அடபாருங்க விலாங்க புடிக்க போனா எறும்புல போய் நிக்கிது.. என்னத்த செய்ய ஒண்ணா ரெண்டா மனசுக்குள்ள இருக்கிறது … ஒண்ண எழுத ஆரம்பிச்சா எல்லாம் வந்து நின்னுகிட்டு என்ன எழுது என்ன எழுதுணு முட்டுதுக…

வழில எங்க மாமாவும் சேந்துகிட்டாரு இப்ப எனக்கு கொஞ்சம் தைரியம் வந்துடுச்சி… வீட்டுல கேட்டா மாமா கூட போனேனு சொல்லிரலாமுல்ல. வாய்க்கால்ல போம்போதே.. மாமா தவள குட்டி நாலு புடிச்சிகிட்டாரு. ஒண்ண எடுத்து தூண்டில்ல மாட்டிட்டு ஒவ்வொரு பொந்தா போட்டுட்டுருந்தாரு. மனசுக்குள்ள ஒரு பக்கம் பாம்பு கீம்பு வந்துடப்போவுதுணு பயம். ஆனா காட்டிக்க முடியுமா?

குளத்துல தூண்டில் போட்டா பாம்பு வந்தாலும் பயமில்ல ஏண்ணா தண்ணிப்பாம்பா தான் இருக்கும். அதுக்கு தான் வெசம் கெடயாதே.. அதுகிட்ட தானே நாம வீரத்த காட்டுவோம். ஆனா வாய்க்கால அப்புடியா எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ணு யாருக்கு தெரியும்.

ஒரு பக்கம் நடுங்கிட்டே இருந்துச்சு மாமா வந்ததுனால அவரு வாய்க்காவுக்குள்ளே எறங்க உடல… கரைல சாக்குப் பைய வச்சுட்டு நின்னுட்டுருந்தன். ஒண்ணும் மாட்டுறாப்புல இல்ல. அத உட்டுட்டு அப்புடியே வாய்க்கா வழியா அடுத்த குண்டுக்கு போனோம் அங்கயும் ஒண்ணுமில்ல … அப்புடியே அடுத்த குண்டுக்கு போனோம்…

இப்புடியே ஒவ்வொரு குண்டா போய் போய் கடைசில வாய்க்கா வழியாவே அடுத்த கொளத்துக்கு வந்து சேந்துட்டோம். அது பெருங்கோட்டு கொளம். கொஞ்சம் பெரிய கொளம்தான். அந்த கொளத்துல அவ்ளோ வெள்ளம் நெறஞ்சி நான் அதுவர பாத்தது கெடயாது. மறுகால் பாஞ்சிட்டு இருந்திச்சி.. மறுகால்லேயெ பயங்கர வெள்ளம்.

மறுகால்னா (Overflow) தண்ணி ஒரு மட்டத்துக்கு மேல போன கரை உடச்சிடக்கூடாதுண்ணு ஒரு பக்கம் கரை மட்டத்துக்கு கொஞ்சம் தாழ்வா கட்டி வச்சிருப்பாங்க. சாதாரணமா அதில ஏறி அடுத்த பக்கம் போற மாதிரி படிக்கட்டு போல கெட்டி வச்சிருக்கும்.

திடீர்னு மாமா தோள பிடிச்சி கூட்டிட்டு போய் அந்த காட்சிய காட்டுனாரு. என் வாழ்க்கைல அப்புடி ஒரு காட்சி கண்டதில்ல இத எழுதுறதுக்கு தூண்டுதலும் அதுதான்.

அங்க மறுகால் வழியா தண்ணி பாஞ்சிட்டுருக்கு கீழ வாய்க்கால்லருந்து மீனுக எல்லாம் துள்ளி திரும்ப குளத்துக்கு வரப்பாத்துட்டுருக்கு. இந்த மீனுகள புடிக்கிறதுக்காக மறுகாலோட ரெண்டு பக்க படிக்கட்டுல ரெண்டு பாம்புக தவமிருந்துட்டுருந்தது. அதாவது படுத்திருக்கல… வால் பக்கம் தரையில ஒரு சுத்து மீதி உடம்பு முழுக்க ஒரு கொடி மாதிரி காத்துல ஆடிட்டுருந்துது… கீழருந்து மீன் துள்ளி மேல வரும்போது குறிபாத்து லபக். இந்த ரெண்டு பாம்புக பத்தாதுணு மேல ஒரு மீன்கொத்தி… வாய்க்காலுக்குள்ள ஒரு கொக்கு… அட.. என்ன ஒரு அபூர்வ காட்சி போங்க. ஒரு ஜீவமரணப் போராட்டம் நடந்துட்டுருந்துச்சு இயற்கையோட வெளையாட்டு.

மீனுக்கு குளத்துக்குள்ள போணும். ஆனா கொக்குகிட்ட மாட்ட கூடாது அது கண்ணுல படாம மறுகால் மட்ட உயரத்துக்கு துள்ளணும். துள்ளி மேலருந்து பாயுற தண்ணியோட வேகத்த எதுத்து நீந்தி குளத்துக்குள்ள போய்டணும். அந்த நேரத்துக்குள்ள இடையில தவமிருக்குற பாம்புகள்ட்ட மாட்ட கூடாது. அதே போல தலைக்கி மேல பறக்குற மீன்கொத்திகிட்டயும் மாட்டகூடாது.

பாம்புக்கு மீனப் புடிக்கணும். மீனு துள்ளி வரும்போது அது வர வேகத்த கணிச்சி அது வர உயரத்த பாத்து தண்ணிக்குள்ள மூழ்கி குளத்துக்குள்ள போறதுக்குள்ள புடிச்சாகணும்.

மேல பறக்குற மீன்கொத்திக்கோ... இந்த பாம்புகளோட போட்டி போட்டு மீனப்புடிக்கணும்.

இன்னிக்கி நெனச்சாலும் கண்ணுக்குள்ள நிக்கிற அபூர்வ காட்சி அது. இண்ணிக்கி வர ஒரு புகைப்படகருவி இல்லாம போச்சேனு கவலைப்படுறதும் அதுக்கு தான்.

கடைசியா அண்ணிக்கி எவ்வளவு தான் அலஞ்சும் விலாங்கு மீன் மட்டும் கெடைக்கவே இல்ல. ஆனா எனக்கு மீன் கெடைக்கலங்குற கவல கொஞ்சம் கூட இல்ல. இந்த காட்சியே மனசுக்குள்ள நெறஞ்சிருந்துது.

மீன் கெடைக்காததுக்கு காரணம் நாங்க வெள்ளம் சரியா வடியிறதுக்குள்ள போய்ட்டோமாம். ஒரு வாரம் பெஞ்ச பெருமழை. வெள்ளம் வடிய கொறஞ்சது மூணு நாளாவது வேணுமாம். மாமா அப்புறமா பேசும் போது ஒரு நாள் சொன்னாரு.

திங்கள், 22 மார்ச், 2010

கனவுத் தொழிற்சாலை......!

இருளடைந்தப் பாழ்வெளியில்
ஒருநாள் நான் படுத்திருந்த போது
கனவுகளின் தேவன் என்னைத்
தேடி வந்தான்

கனவுகளால் காயமுற்றிருந்த நான்
அவனைக் காண அஞ்சி
ஓட எத்தணித்தேன்

கதைகளில் வரும் பூதம் சுண்டு விரலால்
காட்டு மரங்களைத் தூக்கி வீசுவது போல்
என்னைத் தூக்கித் தன் தோளில்
போட்ட படி நடந்து கொண்டிருந்தான்

உலகின் நடுநாயகமாக உயர்ந்து நின்ற
கண்ணாடிக் கட்டிடத்தின்
முன் நின்று கொண்டிருந்தேன் நான்

கண்கள் நிறையக் கனவுகளோடு
பளிச்சிடும் உடைகளுடன்
மலர்ந்த முகம் நிறைய வியப்போடு
பலரும் உள்ளேச் சென்றவாறிருந்தனர்

சுழன்றடிக்கும் காற்று தரையில் கிடக்கும்
இலைத்துணுக்கை ஒரே மூச்சில் உயரேத்தூக்கி
சுற்றிக் கொண்டிருப்பதுபோல்
காற்றில்
சுற்றி வந்தேன் நான்

பிசிறே இல்லாது வெண்ணையில் வெட்டிச் செய்யப்பட்டது போல்
அமைக்கப் பட்டிருந்த ஒரு நீண்ட அறையில்
வரிசை மாறாமல் குவிக்கப் பட்டிருந்த பொறிகளுக்கிடையே
அமர்ந்திருந்தனர் அனைவரும்

மழுங்கச் சிரைத்த தலை மற்றும் முகமுமாய்
கண்களில் கூர்மையுடன் தோன்றிய ஒருவர்
விரல்களைக் காற்றில் வரைந்தபடி
விதவிதமான உருவங்களை உருவாக்கிக்
காட்டியவர்
கடைசியாகக் காட்டியது
அழகான ஒரு உலகம்
முன்னிருந்த ஒவ்வொருவரும்
அங்கே அரசர்களாகக்
கொலுவிருந்தனர்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே
அந்த உலகம் ஒன்று பலவாகப் பிரிந்து
ஒவ்வொருவர் தலைமேலும்
அமர்ந்து சுற்றத் துவங்கியது…

சுழலும் உலகம் சுழலுவிக்க
பொறியை இயக்கியபடியே
இயங்கத் துவங்கினர் அனைவரும்

வெளியே காலம் வேகமாய் மாறிக் கொண்டிருந்தது
உள்ளிருந்தவர்களோ எதுவும்
தெரியாது
இயங்கியபடியே இருந்தனர்

அவர்கள் தலைக்கு மேல் இருந்த
உலகின் ஒளி எப்போதெல்லாம்
குறைந்து கொண்டிருந்ததோ
அப்போதெல்லாம் அந்த மனிதர்
அழைக்கப்பட்டு
உலகம் ஒளியூட்டப் பட்டது

காலநிலை மாற்றத்தில் கண்ணாடிச்சுவர்
இன்னும் இன்னும் கெட்டிப்பட
வெளியே உலகுக்கும்
உள்ளே இருந்தோருக்கும் இடைவெளி
அதிகமாகிக் கொண்டிருந்தது

இயக்கத் துவங்கிய பொறிகள்
அசையத் துவங்கி
அசுர வளர்ச்சி பெற்று
ஒரு கட்டத்தில்
முன்னிருந்தோரைக் கடித்து
விழுங்கத் துவங்கின

சற்று நேரத்திற்குப் பிறகு
பார்க்கையில்
அந்த அறைமுழுதும்
வெறும் எந்திரங்களே
நிறைந்திருந்தன….!

செவ்வாய், 16 மார்ச், 2010

மனப்பறவை.......

சன்னலுக்கு வெளியே
சரிந்து விழும்
மழையின் துளிகள்...

ஓசை கேளா.., திறக்கவியலா
கதவுகளின்
பின்னால் நான்

ஏக்கப் பார்வையினூடே...
எழுந்து பறந்தது
ஒரு பறவை…

மூடிய கதவை முட்டித்திறந்து
முடியாத வானம் நோக்கி
முன்னேறுகிறது…

சொரியும் மழைப்பூக்களின்
விரியும் குளிர்க்காற்றில்

சிறகுகளில் பட்டுச் சிதறும்
வண்ணப் பொட்டுகளை
கண்களில் நிறைத்து…

இன்னும் …. இன்னும்
மேலே...

மேகங்கள் முத்தமிடும்
வானத்திரையில்...
தெறித்து விழும்...
கன்னிப் பூக்களைத்
தொட்டுத் தடவி..
சிட்டுச் சிலிர்த்தது…

கார்முகில் பிழிந்து
தார்நிறம் கலைத்து
மோர் நிற மேகத்தில்
இறகு துடைத்தது…

காரும் நீரும்
கலந்து நடத்திய
கும்ப மேளாவில்
களித்துக் கிடக்கையில்

இடியென்றொலித்த மணியால்
இதயத்தில் நிலநடுக்கம்…

“என்னப்பா… முடிச்சாச்சா…”
……………………………
“அனுப்பி வை…”

நிலைகுலைந்த பறவை
நிலம் நோக்கி வீழ்ந்து
விழி மூட….
விழி திறந்தது பிறிதொரு கழுகு…
....................................

“அனுப்பியாயிற்று…”
...............................

சன்னலுக்குப் பின்னால்

முகிலும் இல்லை…
மழையும் இல்லை…

பறவை மட்டும் ஒரு ஓரத்தில்
தவமிருக்கிறது.....

அந்தக் கண்ணாடிக் கூட்டுக்குள்
அடைபட்ட படியே…

மீண்டுமொரு மழைக்காக…

திங்கள், 1 மார்ச், 2010

கடவுளும் காதலும்...!

படைப்புத் தொழிலும் சலித்துப்போன பரமன்
படியிறங்கி ஒரு நாள்
பூலோகத்தில் நடக்கும்
புத்தகச் சந்தைக்கு வந்தான்

மாலையில் கோர்க்கப் பட்ட ஒழுங்கற்ற
முத்துகள் போல் அடுக்கப் பட்டிருந்த
கடைகளினூடு நடக்கத் துவங்கினான்

ஆருடப் புத்தகங்களை
நமட்டுச் சிரிப்புடன் கடந்தவன்

அறிவில் புத்தகங்களில் மலைத்தான்

அரசியல் புத்தகங்களைப் புரட்டியவன்
கண்களில் தேவலோகத்தில் தேர்தல்
பயம் விரிய வேகமாய் முடிவிட்டு கடந்தான்

தத்துவ நூல்களைப் பார்த்துத் தலைசுற்றியவன்

மத நூல்களைப் பார்த்ததும் மயங்கி விழுந்தான்.

சூழ இருந்தோர் மயக்கம் தெளிவிக்க

எழுந்தவன் சென்ற இடம்
கவிதைச் சந்தைக்கு

கவிதைகள் சாந்தத்தைத் தர
கடவுளுக்கும் வந்தது கவிதை எழுதும் ஆசை

வேகமாக ஓடி கவிதை எழுதுவது எப்படி ?
வாங்கினான்…
வார்த்தைகள் வசப்படாது
ஏங்கினான்….

“காதலித்தால் கவிதை வரும் கண்டு கொண்டேன் உன்னாலே”
கானம் கேட்டு பரவசமானவன்

காதலிப்பது எப்படி ?

புத்தகம் கேட்டு வாங்கினான்

காதலிப்பதற்கு காதலி வேண்டுமே…

தேடத்துவங்கினான் கடவுள்..

இப்போது கடவுளுக்கு

அவசரமாக ஒரு காதலி வேண்டும்

கவிதை எழுதிப் பழக...

சனி, 27 பிப்ரவரி, 2010

பனிக்காலம்.....!

ஒற்றைக் கம்பம் விளக்கெரிக்க
ஒளியும் இருளும் கலந்த
நீண்ட நெடிய சாலை

வெண்பனி விழுந்து
பாதையெங்கும் நிறைக்கிறது

பனி படர்ந்த பாதையினூடு
பயணிக்கின்றன பல்லாயிரம்
பாதங்கள்

அழுத்தமாய் சில
மென்மையாய் பல

வழிகாட்டிச் சில
வழி தொடர்ந்து பல

வெண்பனிப் பாதையெங்கும்
சிதறித் தெறிக்கும் பலவித வர்ணங்கள்

சிவப்பு

மஞ்சள்

பச்சை

நீலம்…

தொடர்ந்து பொழியும் பனியில்

கரைந்து காணாமல் போகின்றன
பாதச் சுவடுகளும்.. பலவித வர்ணங்களும்

பாதங்கள் பதிவதும்
நிறங்கள் தெறிப்பதும்
பனி மூடுவதுமாக…
இயங்கிக் கொண்டே இருக்கிறது பாதை

பனிப் படுகைகள் வழியே
உற்றுப் பார்க்கையில்
சிவப்பு மட்டும்
மிக அடர்த்தியாய்..

தொடர்ந்து பெய்யும் பனியாலும்

மறைக்க முடியாமல்

இன்னும் இன்னும்

தெறித்துக் கொண்டே இருக்கிறது….

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

குளமாகிய நான்...............!

ஓலமிட்டபடியே கரைபுரண்டு ஓடும்
ஆற்றுக் கடுத்தபடி வெட்டப்பட்ட
கால்வாய் நீரைப் பருகியபடியே
சலனமற்றுப் படுத்துக் கிடக்கும்
சிறுகுளம் நான்….

ஒழுங்கற்றுச் சுருட்டப் பட்டிருக்கும்
என் கரைகள் உமக்கு அழகாகத்
தோன்றலாம்…

அந்தி வானின் மஞ்சள் வெயில்
சிந்தித் தெறிக்கும் என் அழகிய
மேனிமீது நீங்கள் மையல்
கொள்ளலாம்…

கரைநெடுக அடர்ந்து படர்ந்து
சமதர்மம் வளர்க்கும்
செடிகொடிகளோடு கதைபல பேசும்
பேர்தெரியாத பலவித பூச்சிகளையும்
பறவைகளையும் நீங்கள் இரசிக்கலாம்.

காற்றற்ற பகல் வெளியில்
நீலவான வரங்கில் மேகக்கூட்டம்
நடத்தும் ஓவியக் கண்காட்சிகளை
கழுத்து வலிக்காமலே என்னில்
கண்டு களிக்கலாம்

ஒரு மாலை நேர மழையில்
எகிறும் கெண்டையின்
வெள்ளிப் பளபளப்பில் உங்கள்
உள்ளம் நெகிழலாம்.

கரை நடுவே இரையுண்ட பாம்புபோல்
நீண்டு வளைந்து கிடக்கும்
ஒற்றையடிப் பாதையில் நடந்தும்
ஓரமாய் ஒருபக்கம் நின்றும் நீங்கள்
உருகிப் போகலாம்

மரநிழலில் மாங்காய் கடித்தபடியே
நெளியும் புழுவை ஊசியில் மாட்டி
ஏமாற்றிச் சில மீன்களைப் பிடிக்கலாம்

எட்டிப் பறிக்கும் தூரத்தில்
கொட்டிக் கிடக்கும்
ஆம்பலையும் தாமரையையும்
தட்டிப் பறித்துக் கொண்டோடலாம்…

பால்நிலா ஒழுகும் பின்னிரவில்
வெள்ளை ஒளிப் பின்னணியில்
ஓங்கி உயர்ந்தாடும் கறுப்புப்
பிசாசு மரங்கள் உங்களைப்
பயமுறுத்தலாம்.

கரையோர கிணற்றில்
தாகம் தீர்க்கலாம்
வழியும் வாய்க்கால்
வழியாக வயல்கள்
வளர்க்கலாம்

இத்தனைப் பயன்கள் என்னிலிருந்து கிடைத்தபின்னும்
என்னை ஆழம் பார்க்கும் எண்ணம் உங்களுக்கு ஏன்?

வெளிப்பார்வை போல்
தெளிவானதல்ல என் உட்பக்கம்…

என் மனவாழத்தில் எறியப்பட்ட
கற்கள் கொஞ்சமல்ல

தலைமுறை தலைமுறையாக
எறியப்பட்ட குப்பைகளின்
மட்கிய நீட்சிகளை இன்னும் எனக்குள் பார்க்கலாம்.

என்றோ வெட்டி எறியப்பட்ட
மூங்கில் கழிகளின்
மீதித்துருத்திக் கொண்டிருந்து
உங்களைப் பதம் பார்க்கலாம்

பெரும் பிரயாசைக்குப் பின்
ஒதுக்கித் தள்ளப்பட்ட
வழிப்போக்கர்கள்
கழுவிச் சென்ற கழிவுகளை
மீண்டும் கலைத்து விடாதீர்கள்…

இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்…
எனக்குள் இறங்கி
என் அமைதியைக் குலைக்கும்
உங்கள் முயற்சிகளை.

மண்கரை தாண்டி
ஈரமணல் தொட்டு
உள்ளிறங்கத் துடிக்கும் உங்கள் பாதங்களுக்குப்
பூட்டிடுங்கள்.

தீயைச் சுட்ட விரலைப் போல்
தீண்டத் துடிக்கும்
விரல்களைப் பின்னிழுத்துக் கொள்ளுங்கள்..

என் நீரைக் கொப்பளித்து
என்மீது உமிழ்ந்தவர்களின்
வீச்சமும்
வீரியமும் இன்னும் தீரவில்லை…

கிளறி விட்டு விடாதீர்கள்
ஆழத்தில் அமிழ்ந்திருக்கும்
சேற்றினை…

அதன் நாற்றத்தைச் சகிக்கும் சக்தி
உங்களில் யாருக்கும் இல்லை…
யாருக்குமே.....!

திறப்போம் நம் மனக் கதவுகளை...!

மனங்கள் மயங்கும்
மனிதர்கள் கசங்கும்
சந்தை வீதியில்
சூரியன் சுட்டெரிக்கும்
காலை வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைத் தேடினான் ஒருவன்….!

மாடடைக்கும் கொட்டிலில்
மார்கழிக் குளிரிரவில்
'மனிதன் இருக்கிறான்
மனம் மட்டும் மாறட்டும்'
எனப் பிறந்தான் ஒருவன்…!

அடித்தால் அடி உதைத்தால் உதை
வெட்டினால் வெட்டு
என்று வன்முறை வளர்த்த தேசத்தில்

ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!

உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்

இதுவரை பாவம் செய்யாதவன்
எறியட்டும் முதல் கல் என்று
எவரையும் தீர்ப்பிடாதவன்.

உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!

தேவாலயங்களைத் துறந்து விட்டு
தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!


மதத்தின் மதத்தை மிதித்து
மனிதத்தை மதித்தவன் …..!

அவன் ஒரு ஏழை

அவன் ஒரு தொழிலாளி

அவன் ஒரு சாதாரணன்…

உன் எதிரிலேயே
தெருவில் அலைந்து திரியும்
வழிப்போக்கன்…!

மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!

நொறுங்கி விட்ட இதயங்களை
பொறுக்கிச் சேர்க்க….!

பிரிந்து விட்ட மனங்களை
இணைத்துச் சேர்க்க…!

இனமென்றும் மொழியென்றும்
வீடென்றும் நாடெனறும்
மதமென்றும் ...
கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!

வருகிறான் மீண்டும்....

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!

பிறக்க இடமின்றி
ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
வருகிறான்....

திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!

மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
மனங்களில்…..!

இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!

கனவின் பொருள் தேடி........!

கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
சுற்றிலும் சூரியனின் ஒளிவெள்ளம்

சுட்டெரித்த சூரியன் திடுமென மறைகிறான்....
பனிபொழிந்து முழுக்க பனிப்பாலையானது
மண்பாலை முழுவதும் வெண்பாலையானது
முழுநிலா... ஒளிவெள்ளம் பொழிய
வெள்ளை உலகிலே
விழி விரியப் பார்த்தபடி நான்...
வெண்மை வெண்மை வெண்மை.....
எங்கும் எதிலும்....

வெண்மைக்குப் பங்கம் வந்திடக்கூடாதென்று
நட்சத்திரங்களும் நகர்ந்து விட்டன
வெண்மேகங்களும் தவழ்ந்து தாழ்ந்து
கருவானத்தை மறைத்து விட்டன

குளிர்ந்த தென்றல் இதமாய் என்
குழல் கலைத்தது...
எலும்பினுள் புகுந்த குளிரால் உடலெங்கும் பரவிய
நடுக்கம்....
ஒரு நொடிப் பரவசத்தைக் கொடுத்து நின்றது.
பற்கள் மட்டும்
பக்குவப் படாமல் படபடத்தபடியே...

கண்ணுக்குள் புகுந்த வெள்ளைமழை
கண்ணீர் மழையாய் கரைந்து விடக்கூடாதென
இமைவிரைந்து மூடிய அந்த ஒரு கணத்தில்...

மறுபடியும் விரைந்து வந்தான்
சுட்டெரித்த படியே சூரியன்
கனல் பறக்கும் கடும் பாலை
நடுவிலே நான்
கானலும் மணலும் தவிர
கடுகளவும் நீரில்லைச் சுற்றிலும்
என்னைத் தவிர உயிரெதுவும்
இருப்பதுவும் தெரியவில்லை
இமைகளை விரிக்க முடியாதபடி
-----------------
இல்லை.... இல்லை இப்போது விரிக்க முடிகிறதே....
மெல்ல விரித்து ... சுற்றிலும் பார்த்தேன்....
சன்னலின் சீலையைத் தாண்டி ஒழுகும்
காலைச் சூரியனின் கீற்றுகள்
குளிரூட்டியின் ....லேசான இரைச்சலும்
மிதமான குளிரும்.....

இன்றுவரை
தேடிக் கொண்டிருக்கிறேன் இந்தக்
கனவின் பொருள் என்ன வென்று....

ஒரு ஆறும் ஒரு மழையும்........!

பெரிய மலைக்குக் கீழே
பரந்து விரிந்திருந்த அடிவாரப்
படுகையின் நடுவே
படுத்துக் கிடந்தது அந்த ஆறு

உயிரும் உடலும் வற்றிப்போய்
வறட்டு வெயிலில் யுகயுகமாய்
காய்ந்து போன
நீண்ட பெரிய ஒரு மலைப்பாம்பினைப் போல
சிதிலமாகிக் கிடந்தது அது

ஆற்று நீர் உருட்டி விளையாடிய
குளிர் கூழாங்கற்கள் அனைத்தும்
கடும் வெயிலில் காய்ந்து பழுத்திருந்தன.

ஆற்றுப் பாதை முழுதும்
வெயிலில் வெந்து கொண்டிருக்க
தனிமையும் மொளனமும்
தங்களுக்குள் சைகை மொழி பேசியபடி
அலைந்து கொண்டிருந்தன

முட்புதர்கள் முற்றும் எரிந்திருக்க…
ஒண்டியிருந்த ஒன்றிரண்டு மரங்கள் மட்டும்
இலையாடைகளைத் துறந்து விட்டு
கிளைக் கரங்கள் எரிந்த நிலையில்
உடன் கட்டை ஏறிக் கொண்டிருந்தன.

இருந்த ஒன்றிரண்டு புற்களையும்
கருகவைத்த கதிரவன்
கடலுள் மூழ்கி தன் பாவம்
கழுவச் சென்றான்.

அடர்ந்த அமாவாசை இரவு
அன்று மட்டும் இருளாயில்லை

எங்கிருந்தோப் பறந்து வந்த
கார்மேகங்களின் மோதுதலில்
இடியொலியும் மின்னலொளியும்
மங்கல வாத்தியங்களாய் முழங்க
நிறைந்து தளும்பும் ஏரி
கரையுடைத்துப் பாய்வது போல்
கொட்டித் தீர்த்தது வானம்

விடிகாலை வெளிப்போந்தக்
கதிரவன் கண்களுக்கு
மாறியிருந்தன காட்சிகள்

நுரைபொங்கக் கரை ததும்ப
ஓடிக்கொண்டிருந்தது வெள்ளம்

காய்ந்து கிடந்த முட்டைகள்
குளிர்நீர் பட்டதும் வெடித்துப்
பிறந்த மீன்குஞ்சுகள்
எங்கும் நீந்திக் களித்தன

ஓரிரவிற்குள்ளேயே பச்சையாடை
போர்த்தத் துவங்கியிருந்தாள் நிலமகள்.

பழுத்துக் கிடந்த கூழாங்கற்களை
தன் குளிர்கரங்களால் தழுவியபடி
அவற்றின் காதுகளுக்குள்
மலையின் இரகசியங்களை
உரத்துச் சொன்ன தண்ணீரின்
சலசலப்பு எங்கும் எதிரொலித்தது

புதிய கற்களுக்கும்
முன்பிருந்த கற்களுக்கும்
இடையே நடந்த நிலச் சண்டையில்
வழிந்தோடியது மணல் இரத்தம்

காணாமல் போயிருந்த
கொக்கு, காகம், மான், மயில்
மற்றும் உறவினர்கள் அனைவரும்
விருந்துண்ண வந்திருந்தனர்

இறந்து போய் உயிர் வந்தவன் போல்
கவனிப்புக்குள்ளானது ஆறு

மூன்று வருடங்களுக் கொருமுறை
மூன்று மாதம் வீடு வந்து செல்லும்
வெளிநாட்டுக் கணவன் போல்
மூன்று நாள் மழை விடைபெற
கணவனைப் பிரிந்த காரிகையாய்
களையிழந்தது ஆறு

அத்தனை உறவுகளும் மொத்தமாய்
பறந்து விட
குதூகலக் கொண்டாட்டத்தில்
குளித்திருந்த ஆறு தன்
வறண்டு போன நாவை
கடைசி துளி நீரை ஊறிஞ்சி
ஈரமாக்கிக் கொண்டது

பெருமழைக்காய் காத்திருப்பதும்
பெய்த சுவடு காயும் முன் ஓடுவதுமாய்
மழை நிகழ்த்தும் இந்தக் கண்ணாமூச்சி
ஆற்றின் மனதை அறுக்கும்
ஆறா இரணமாகிப் போனது…

ஆற்றின் வேதனைப் பெருமூச்சு
அந்தப் பாழ்வெளியெங்கும்
வெப்பக் காற்றாய் வீசியது

வானத்தைப் பார்த்தபடியே
காத்திருந்து சலித்துப் போன ஆறு
இப்போதெல்லாம் வான் நோக்கி கேட்பது
ஒன்றே ஒன்று தான்.

வந்து விடவே வேண்டாம்
இந்த மழை ….!